கிரிக்கெட்டைப் பாதுகாக்க முன்வாருங்கள்: சஜித் அழைப்பு

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நாட்டுக்குத் துரோகமிழைத்துள்ளது. நாட்டு மக்களே கிரிக்கெட்டைப் பாதுகாக்க முன்வாருங்கள் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு, மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்ற சமூக ஊடக ஆர்வலர்கள் பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எப்பொழுதும் பிரிந்து கிடக்கும் நாடாளுமன்றம், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாப்பதற்கும், கிராமங்கள், நகர மட்டங்களில், மாகாண மற்றும் கிரிக்கெட் கழக மட்டங்களில் அதை அபிவிருத்தி செய்வதற்குமான ஒரு வேலைத்திட்டத்துக்காக ஒன்றிணைந்தன.


இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை நமது நாட்டு கிரிக்கெட்டைத் தடை செய்துள்ளது. எமது சொந்த நாட்டில் உள்ள இலங்கை கிரிக்கெட் பேரவை என்ற அமைப்பே இந்தத் தடைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

நமது சொந்த நாட்டில் ஒரு நிறுவனம் நாட்டுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்டாலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேசத் துரோகிகளே உள்ளனர். அவர்கள் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்குமே துரோகமிழைத்துள்ளனர்.

ஐ.பி.எல். தடைக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான பங்கேற்பும் இழக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தங்கள் மோசடி பரிவர்த்தனைகள், ஊழல் பண பரிவர்த்தனைகள் மற்றும் செயல்முறைகளை ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள முற்படுகின்றனர்.

ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகத்துக்குப் பல்வேறு தடைகள் வருவதாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவித்துள்ளனர்.

அவர்கள் அவ்வாறு கூறினால் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது இலஞ்சம், ஊழல், கப்பம், கொமிசன் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமா என்பது பிரச்சினைக்குரியது. நாட்டில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கிடைத்த பணம் கூடத் திருடப்பட்டுள்ளது.

இவ்வாறு பணத்தைத் திருடும்போது முதுகெலும்பு இல்லாதவர்கள் போல் இருப்பதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல் ஜனநாயகம் என்ற பெயரில் 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும்.

உறவு முறைகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட திருட்டு மோசடிகளாலேயே நாடு வங்குரோத்தாகியது. இது இலங்கை கிரிக்கெட்டையும் ஆக்கிரமித்துள்ளதால் இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்." - என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

MOHAMED SUTHAISY

Hello, I'm Faris Mohamed Suthaisy from Anuradhapura, Sri Lanka. I have diplomas in Information Technology, Web Design, and Computer Hardware Engineering, and I am skilled in professional phone & computer repair and web design . Currently, I'm pursuing a BTEC HND in Computing & Software Engineering at Pearson University. Additionally, I am the Owner and CEO of FAMILY MOBILE and SUNDAY BBC.

புதியது பழையவை

Reference for Result

Recent Post & News

نموذج الاتصال