வடக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர்கள் 214 பேர் தேவையாக உள்ளபோதும் கடமையில் இருப்பது 129 பேர் என தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதிலளித்துள்ளது.
அந்த அமைச்சு வெளியிட்டுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்தில் 95 -1AB பாடசாலைகளும், 124 - 1C பாடசாலைகளும் காணப்படுகின்றன.இவற்றில் 128 பாடசாலைகளில் மாத்திரமே தரம் 1 அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
அத்தோடு 21 தரம் 1 அதிபர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர்களாக கடமையாற்றுகின்றனர். ஆனால் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பதவி இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 2 மற்றும் 3 இற்கு நிரற்படுத்தப்பட்ட பதவி என்பது இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பதவிநிலை தொடர்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையிலேயே 21 தரம் 1 அதிபர்கள் வடக்கில் கோட்டக்கல்வி அதிகாரிகளாக கடமையாற்றி வருகின்றனர் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதிலளித்துள்ளது.