காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் : சிவாஜிலிங்கம் விடுத்துள்ள சவால்

காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினுடைய தலைவர் ஐங்கரநேசன் அவர்கள் தமிழ் கட்சிகளின் ஒழுங்கு செய்யப்பட்ட மனித சங்கிலியைப் பற்றி நார் நாராக கிழித்து போட்டு இருக்கின்றார்.
மனித சங்கிலி போராட்டம்

இவர் இவ்வாறு கூறுகின்ற விடயம் எல்லாம் தொடர்ச்சியாக நாங்கள் எட்டு கட்சிகள் சேர்ந்து ஒரு பொது வேலை நிறுத்தம் கடையடைப்பு போராட்டத்தினை செய்திருந்தோம்.


அதிலே அவர் குறிப்பிடுகின்ற போது மனித சங்கிலி போராட்டம் தோல்வியிலே நிறைவடைந்து இருக்கின்றது. தலைவர்கள் வேட்டி கசங்காமல் போராடுகின்றார்கள் உள்ளிட்ட பல விடயங்களை கூறியிருக்கின்றார்.

இவ்வாறு கூறியவர் கடையடைப்பு பற்றி ஏன் மூச்சு விடவில்லை என நான் கேட்க விரும்புகின்றேன், அதிலிருந்து இது வெற்றி பெற்று இருக்கின்றது என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை மனித சங்கிலி போராட்டம் பெறவில்லை என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே கூறி இருந்தோம்.
மீன் சந்தை விவகாரம்

ஆனால் பிசுபிசுத்து விட்டது, போன்ற விடயங்களை கூறியது மாத்திரமல்லாமல் இன்னுமொரு உண்ணாவிரதத்தை பற்றி குறிப்பிட்டு அதிலே ஒரு கட்சித் தலைவர் உண்ணாவிரதத்தில் காலையில் இருந்தார் மதியம் 11 மணிக்கு மீன் சந்தையிலே நின்றார் தொடர்ந்து மாலையில் உண்ணாவிரதம் முடிக்கும் போது இருந்தார் என்று எல்லாம் கூறி இருந்தார்.



நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் அப்படி என்றால் இவரும் அந்த மீன் சந்தைக்கு போய் இருக்கின்றார் என்று தானே அர்த்தம்.

யார் அந்த தலைவர் என்று பகிரங்கமாக சொல்லட்டும் அதை விடுத்து விடுகதை சொல்லுவது போன்று சொல்லுவதில் அர்த்தமில்லை.

இவ்வாறு சொல்பவர் பெரிய வீராதி வீரன் என்று யாராவது நினைத்தால் இது தவறு. அஞ்சி அஞ்சி பொலிஸாரின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் அடிக்கடி என்னிடம் கேட்பார்.

குறிப்பாக ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தியாக தீபம் திலீபனுடைய நினைவஞ்சலி அன்று, அந்த நினைவஞ்சலிக்கு தடை விதிக்கக் கூடாது என்று நாங்கள் ஒன்பது கட்சிகள் கூடினோம்.


இதன்போது ஐங்கரநேசனுடைய கட்சியை கூட அழைத்து ஜனாதிபதிக்கு கடிதங்கள் எல்லாம் எழுதியிருந்தோம். தடை விதிக்கப்பட்டும் அந்த தடையை மீறி அஞ்சலி செலுத்தினேன்.

இதற்காக 15ஆம் திகதி காலையில் கோண்டாவிலில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 24 மணித்தியாலங்கள் அதாவது அடுத்த நாள் காலை வரை பொலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளியேறியிருந்தேன்.

அது இப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் என் மீது தண்டனைக்குரிய குற்றம் என்று, 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவா தடைச் சட்டம், அதேபோல் 2011 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட விசேட ஒழுங்கு விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு நான் விசாரணை எதிர்நோக்கி இருக்கின்றேன்.

இந்த சூழ்நிலையில் தான் நாங்கள் பலரும் ஒன்று கூடி செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி தியாக தீபம் திலீபனுடைய நினைவு தினம் அன்று ஒரு உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தோம்.

சாவகச்சேரி நீதிமன்றம் தடை விதிக்காததை கருத்தில் கொண்டு சாவகச்சேரியில் நினைவு தினத்தை நடத்துவதற்கு காலையில் தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்துக் கொண்டு சென்ற போது நீங்கள் சாவகச்சேரிக்கு வாருங்கள் என்று நான் ஐங்கரநேசனிடம் தகவல் தெரிவித்தேன்.

இதன்போது “அண்ணே பொலிஸ் பிடிப்பார்களா” என்று கூறிவிட்டு அவர் அன்றைய உண்ணாவிரதத்துக்கு வரவில்லை, இவ்வாறு நடந்து கொள்பவர் போராட்டத்தில் இருக்கக்கூடிய ஏற்ற இறக்கங்கள் சறுக்கல்களை பற்றி பேசக்கூடாது.

ஆகவே இவர்கள் ஏதோ பசுமை என்று வைத்துக்கொண்டு கட்சி என்று வைத்துக்கொண்டு செல்லுகின்ற விடயங்களுக்கெல்லாம் நாங்கள் பாத்திரவாளிகளாக ஆக முடியாது.


இன்று மனிதச் சங்கிலியில், நீங்கள் கலந்து கொள்கின்ற ஒரு சில போராட்டங்களில் பேருந்தில் ஏற்றி வருகின்ற ஐம்பது, 100 பேருடன் நடைபெறுகின்ற போராட்டம் அல்ல.

ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பல இடங்களிலே கூடி நின்று தான் எங்களுடைய மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார்கள்.

அது மாத்திரமல்ல அவர்கள் தங்களுடைய தலைமைச் செயலகம் அமைந்திருக்கின்ற கொக்கில் பகுதியில் திரண்டு சங்கிலியாக நின்றிருந்தார்கள்.


ஆகவே ஐங்கரநேசன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவரை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டபோது விக்னேஸ்வரனுடைய வீட்டில் கூட்டம் நடைபெறுகின்றதால் கலந்து கொள்ள முடியாது என்று கூறி இருந்தார்.

ஆகவே உங்களை நாங்கள் அழைக்காமலும் விடவில்லை. நாங்கள் ஒரு மரியாதை கொடுத்து எல்லோரையும் அழைத்தோம்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புகளை கண்டித்து முதலாவது மனித சங்கிலி நடைபெற்றது.

நீதிபதி சரவணராஜா அவர்களுக்காக நடத்தப்பட்ட மனித சங்கிலியில் முல்லைதீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இருந்தும் சட்டத்தரணிகள் பெருமளவில் நின்றதை இவர் பார்க்கவில்லையா? என தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

MOHAMED SUTHAISY

Hello, I'm Faris Mohamed Suthaisy from Anuradhapura, Sri Lanka. I have diplomas in Information Technology, Web Design, and Computer Hardware Engineering, and I am skilled in professional phone & computer repair and web design . Currently, I'm pursuing a BTEC HND in Computing & Software Engineering at Pearson University. Additionally, I am the Owner and CEO of FAMILY MOBILE and SUNDAY BBC.

புதியது பழையவை

نموذج الاتصال