தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வட்டிவீத குறைப்பின் மூலம் அரச திறைசேரியினால் விநியோகிக்கப்பட்ட பிணையங்களுக்கான வட்டிவீதமும், வங்கிகளின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதமும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி நாணயக்கொள்கை மீளாய்வுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் (24.11.2023) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையகாலங்களில் அவதானிக்கப்பட்ட பணவீக்க சாதக நிலையின் காரணமாக வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்கள் முறையே 9 மற்றும் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வட்டிவீத குறைப்பின் மூலம் அரச திறைசேரியினால் விநியோகிக்கப்பட்ட பிணையங்களுக்கான வட்டிவீதமும், வங்கிகளின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதமும் குறைய வேண்டும்.
அதேபோன்று எரிபொருள் விலையேற்றம் போன்ற சில காரணங்களால் குறுங்காலத்தில் பணவீக்கம் சிறிதளவால் அதிகரித்தாலும், நீண்டகாலத்தில் அதனை இலக்கிடப்பட்ட குறைந்த மட்டத்தில் பேணமுடியும். அத்தோடு, உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் இருப்பதுடன், நாம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவே எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவி செயற்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாம் கட்ட மதிப்பீட்டுக்கு சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.
அதனை தொடர்ந்து நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன்நிதியையும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிக்கட்டமைப்புக்களின் நிதியுதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
வரி அறவீடுகள்
அடுத்ததாக அரசாங்கத்தினால் வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட்டாலும், அது சமூகப் பாதுகாப்பு செயற்திட்டம் உள்ளிட்ட தேவைப்பாடுகளுக்காக வேறு விதத்தில் செலவிடப்படுகின்றது.
எனவே இந்த வரி அறவீடு நாணயக்கொள்கையைப் போன்று நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதுடன், இதன்மூலம் பொருளாதார மேம்பாட்டை பெருமளவுக்கு எதிர்பார்க்க முடியாது.
மேலும், நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களென உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் இருவரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதியுயர் கட்டமைப்பு என்ற ரீதியில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பட்டியலில் நாணயச்சபையும் இருப்பதனால், அதுகுறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளை பெற்றுவருகின்றோம் என தெரிவித்துள்ளார்.