களுத்துறை - வஸ்காடுவவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(29.11.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்ல பயணத்தை மேற்கொண்டபோதே பேருந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதம்
அளுத்கமவிலிருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதி குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன், தொடருந்தும் சேதமடைந்ததுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விபத்து காரணமாக கடலோர தொடருந்து மார்க்கத்தில் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.