தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 13,588 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, பெறுபேறுகளின் அடிப்படையில் 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவி ஒருவரும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவரும் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு றோயல் கல்லூரியை சேர்ந்த மாணவன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் நான்காம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கம்பஹா ஹோலி க்ரொஸ் கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்கள் பிடித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.