முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு, மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களால் பாடசாலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையை சூழ உள்ள கிராமத்திலுள்ள மாணவர்கள் பாடசாலை செல்லும் வீதிகள் அனைத்திலும் வெள்ளநீர் பாய்வதால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான மந்துவில் கிராமத்தினுடைய வீதிகளில் உரிய வடிகால் அமைப்புகள் இல்லாமையினாலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் சுமார் 14 ஆண்டுகளாக எந்த திருத்த பணிகளும் மேற்கொள்ளாமல் இருக்கின்ற நிலையிலும், வடிகால்களில் ஓட வேண்டிய நீர் பிரதான பாதைகள் ஊடாகவே ஓடி வருகின்றது.
எனவே பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் முதல் வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் தெரியப்படுத்தியும் பிரதேச சபையினுடைய தவிசாளர் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து குறித்த இடங்களை காண்பித்துள்ள போதும் இன்று வரை இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே பிரதேச சபையினர் விரைவாக வடிகான்களை சீரமைத்து பாடசாலை மாணவர்கள் பாடசாலை சென்று வருவதற்கும், பொது மக்களினுடைய போக்குவரத்துக்கும் ஏற்ற வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 ஆண்டுகளாக தாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றபோதும் இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படாத நிலையில், இதன் பின்னராவது இந்த வீதிகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமெனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,
குறித்த பகுதிகளில் நீர் தேங்கி ஓடுவதற்காக பிரதானமான காரணமாக புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு ஏ 35 பிரதான வீதி ஓரத்திலே வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய வடிகால் அமைப்புகள் செய்யப்படாமல் இருப்பதால் குறித்த பகுதிகளில் நீர் தேங்குவதால் இங்குள்ள நீர் விரைவாக வடிந்த ஓடாமல் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அந்த வீதியோரத்தில் இருக்கின்ற வடிகால்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உரிய வகையில் புனரமைக்கின்ற போது குறித்த பகுதிகளில் உள்ள நீர் விரைவாக வடிந்து ஓடக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், தற்காலிகமாக தங்களால் அந்த பகுதிகளில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக அவதானித்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீதி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது,
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்படுகின்ற நிலையில் புதுகுடியிருப்பு நகர பகுதியில் வெள்ள நிலைமைகளுக்கான வேலைத்திட்டங்களுக்காக 100 மில்லியன் பெறுமதியான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறித்த மந்துவில் பகுதியினுடைய வெள்ளம் வடிந்து ஓடக்கூடிய வகையிலே எதிர்வரும் வருடத்தில் தாங்கள் அதற்கான ஒரு நிரந்தர வடிகால்களை அமைப்பதாகவும், தற்காலிகமாக வெள்ள நீரை வெளியேற்றக்கூடிய வாய்ப்புகளை அவதானித்து அது தொடர்பில் செயல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.