இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததையடுத்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்ட ஜகத் பிரியங்கர, வியாழக்கிழமை (8) காலை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 80082 வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்ததார்.
இந்நிலையில், தோல்வியடைந்தவர்களின் பட்டியலில்ஜெகத் பிரியங்கர முதலிடத்தைப் பெற்று 40527 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வெலிசர நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.