ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் வழிநடத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
‘தேர்தல்களில் 'யானை’ சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும், எதிர்வரும் தேர்தல்களுக்கான கட்சியின் வியூகம் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன(Vajira Abeywardena), எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், கட்சி முன்னோக்கி செல்லும் போது அதன் திசையை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அபேவர்தன கூறியுள்ளார்
இலங்கையின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியானது, தனது அடையாளத்திற்கும் வாக்காளர் அங்கீகாரத்திற்கும் மையமாக இருந்த ‘யானை’ சின்னத்துடன் நீண்டகால தொடர்பைக் கொண்டுள்ளது.