கம்பஹா - வெயாங்கொட, வந்துரம்ப பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதைந்துள்ளதாக கூறப்படும் புதையலை தேடும் பணி இடம்பெற்று வருகிறது.
அத்தனகல்லை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை நேற்று (22.11.2024) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடம் பல வருடங்களாக புதையல் தேடுபவர்களால் தோண்டப்பட்டு வருவதாக வெயங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.
இவ்வாறு தொடர்ந்தும் பலர் கைது செய்யப்படும் நிலையில், அந்த இடத்தில் உண்மையில் ஏதாவது புதைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியுமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அத்தனகல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட சோதனையின் போது, அந்த இடத்தில் புதையல் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசாரணைகளில் நிலத்தில் ஏதோ ஒன்று புதையுண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அகழ்வுப் பணிகள், தற்போது தொல்பொருள் திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், வெயாங்கொட பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மீரிகம பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன.
இருப்பினும், இன்று மதிய உணவிற்குப் பின்னரான அகழ்வுப் பணிகள் கடும் மழையினால் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.