அம்பாந்தோட்டை(Hambantota)- அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள கார்களுக்கு வர்ணம் பூசும் வாகன திருத்துமிடத்தில் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அங்குனுகொலபெலஸ்ஸ - ரன்ன வீதியில் வசிக்கும் சதீப சித்மின என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
வெடித்துச் சிதறிய இரும்பு பெரல் வாகன திருத்துமிடத்தில் வாகனங்களுக்குப் நிறப்பூச்சு தின்னர் கொண்டு வரப் பயன்படுத்தப்படும் வெற்று இரும்பு பெரல் எனவும், அதில் இருந்த வாயுவே வெடிப்பதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெடித்த பெரலின் மூடி பகுதி கழன்று வீசப்பட்டு இளைஞரின் கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால் இளைஞர் அகுனகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.