தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்தியின் சிரமதானத்தில் தாம் அகப்பட்டாலும், தான் புதைக்கப்படவில்லை என்றும், எனவே மீண்டும் எழுச்சி பெறுவது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி உட்பட தரமற்ற மருந்து ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அமைச்சரவை அமைச்சர்கள் இந்த ஊழலில் நேரடி பொறுப்பை கொண்டிருக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார். பொதுவாக அமைச்சக செயலாளர்கள் ஆவணங்களை இறுதி செய்து சமர்ப்பிப்பார்கள்.
அந்தவகையில், தமது அமைச்சகத்திற்கு தொடர்புடைய ஆவணங்களை தாம் மதிப்பீடு செய்ததாக ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறித்த ஊழல் விடயத்தில் தமக்கு சம்பந்தம் இல்லையென்ற போதும், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து வாக்குமூலம் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய தேர்தல் தோல்வி குறித்தும் கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் தங்களுக்கு பாடம் கற்பித்துள்ளனர். இதில் இருந்து மீண்டும் எப்படி எழுவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், நெருக்கடியின் போது தாங்கள் ஓடவில்லை, எனவே இந்த சவாலில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது தங்கள் கட்சி தரைமட்டமாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால் புதைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், அவர்கள் நாடாளுமன்றத்தை சுத்தம் செய்துள்ளனர், இப்போது புதிய முகங்களையும் அமைச்சர்களையும் அரசாங்கத்தில் பார்க்கமுடிகிறது என்று ஹரின் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான ரமேஸ் பத்திரன, ரொசான் ரணசிங்க மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேற்று முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.