வென்னப்புவவில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர், இரண்டு ஆசிரியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று மாதங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.
ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 13ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையின்போது, அவரது மரணம் மூளையில் ரத்தக் கசிவால் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் நவம்பர் 14 ஆம் திகதியன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களை நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவி, வகுப்பறைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமது தாமதத்துக்காக முரண்பட்ட விளக்கங்களைவழங்கியதற்காக தண்டனையாக அவளை உடல் ரீதியாக தாக்கியதாகவும், மண்டியிட வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பொலிஸில் ஒப்புக்கொண்டனர்.
ஒகஸ்ட் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலின் விளைவாக மாணவி முதலில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ராகம மருத்துவமனைக்கு மாற்ற நிலையில், அங்கு அவர் நவம்பர் 13 இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.