தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் பயணம் தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "உண்மை மற்றும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, மக்கள் ஆணையை ஏற்று, மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகப் புதிய வழியில் எமது பயணம் கூட்டுப் பொறுப்புடன் தொடரும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சம்பிரதாயக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
எனவே, பின்னடைவு, தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்நோக்கிச் செல்வோம். ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதி தான் ஆகின்றது.
இந்தக் காலப்பகுதிக்குள் முன்னேற்றமும் உள்ளது, பின்னடைவும் உள்ளது. பலவீனங்களை இனங்கண்டு சரியான திசையில் பயணிப்பதே இராஜதந்திரம். ஐக்கிய மக்கள் சக்தி என்பது அம்பலம் கிடையாது.
தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் எவரும் கட்சியைப் பயன்படுத்த முடியாது. கொள்கை அடிப்படையில் மக்கள் மற்றும் நாட்டு நலனுக்காக இணைந்து பயணிக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.