ஐக்கிய தேசியக் கட்சியானது 1970 இல் , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் தோல்வியடைந்த பின்னர், கட்சி நடுக்கத்தை சந்தித்தது எனவும், அதேபோன்ற நிலை இன்று ஏற்பட்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி, எந்தவொரு பாதகமான சூழ்நிலையையும் தாங்கும் எனவும், அக கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்( M. A. Bakeer Markar) தெரிவித்துள்ளார்.
1970 இல், தேர்தல் தோல்விக்கு பின்னர், ஐக்கிய தேசியக்கட்சி பிளவுக்கு அருகில் வந்தாலும் நடுக்கத்தைத் தாங்கிக் கொண்டது. அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியும் தற்போது, நடுக்கங்களை சந்திக்க நேரிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய இதுபோன்ற சூழ்நிலைகளை தாங்கும் திறனை கட்சி பெற்றுள்ளதாகவும், மார்க்கர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி. 1981 இல் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டது. அது ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசித்ததில் இருந்து கட்சி தோல்விகளைச் சந்தித்தது. எவ்வாறாயினும், ஜே.வி.பியின் தலைவர்களை இராஜினாமா செய்து கட்சியை மற்றவர்களுக்கு ஒப்படைக்குமாறு எவரும் கோரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில், ஜே.வி.பி உருவாக்கப்பட்டு பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதல் முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. அதுபோன்று ஐக்கிய மக்கள் சக்தியும், குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டு வரும் என மாக்கார் தெரிவித்துள்ளார்.