மட்டக்களப்பு - வாகரை பகுதியில் மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (22.11.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டினை மேற்கொள்வதால் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம பொது மக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன்போது தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வாகரை பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனிடம் மனு ஒன்றினை கையளித்ததனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.