இலங்கையில் போலியான தலைமுடி கலரிங் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பொது மக்களுக்கு, நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தகைய தயாரிப்புகள் பற்றிய தகவல்கள் இருந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தொலைபேசி இலக்கமான 1977 க்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி போலியான முடியை நிறமாக்கும் கிரீம்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய புறக்கோட்டையில் உள்ள பழைய மாநகர சபை கட்டிடம் மற்றும் பீப்பிள்ஸ் பார்க் ஆகிய இடங்களில் போலியான கிரீம்கள் விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இவை தவறான முறையில் உருவாக்கப்பட்டதாகவும், சரியான பொதியிடல் எடை 21 கிராம் எனவும் இந்த போலிப் பொருளின் எடை 10 கிராம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று வர்த்தகர்களும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.