தமிழ் சமூகமானது தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கும் முறையை உடைத்து, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க முன்வந்தமைக்கு வடக்கில் திடீரென வீசிய அநுர அலையே காரணம் என யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியானது பொது தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று முக்கிய அரசியல் வரலாற்றை படைக்க வடக்கில் உள்ள தமிழ் சமூகத்தின் பங்கு முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
குறிப்பாக தமிழ் சமூகம் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்கும் முறைமை உடைக்கப்பட்டு, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தமையானது இந்த நாட்டின் முக்கிய வரலாறாகும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் வடக்கில் தமிழ் சமூகத்தின் மத்தியில் அநுர தொடர்பிலான தெளிவான ஆதரவு அலை வீசியதை அவதானிக்க முடிந்ததாக விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பல தமிழ் வாக்காளர்கள், தமது சமூகத்தின் அரசியல் தலைவர்கள் தமக்கான சிறந்த தீர்வு தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்காக அவர்கள் மீது கோபமடைந்துள்ளனர் எனவும் அகிலன் கதிர்காமர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு, இலங்கை அரசாங்கம், இராணுவம் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களால் குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தின் போது கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீள வழங்க வேண்டும் எனவும், நாட்டின் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.