பிரித்தானியாவில் ஆபத்தான நோரோ வைரஸ்(Noro virus) பரவி வருவதால் இரண்டு நாட்களுக்கு வீட்டுக்குளேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நோரோ வைரஸ் மிகவும் ஆபத்தான மற்றும் பரவக்கூடிய ஒரு வைரஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குடும்பத்தில் யாராவது நோரோ வைரஸ் தொற்றுக்குள்ளானால் அவர்களை பாதுகாக்க வழிவகைகள் உள்ளதாக தேசிய சுகாதார சேவை(NHS) அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகுவதன் மூலமும் அசுத்தமான பகுதி அல்லது பொருட்களைத் தொட்டு, பின்னர் வாய் அல்லது மூக்கைத் தொடுவதன் மூலமும் குறித்த வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக 'NHS' எச்சரித்துள்ளது.

அத்துடன், நோய்வாய்ப்பட்ட ஒருவரால் தயாரிக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட உணவின் மூலமும் இந்த வைரஸ் பரவலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டினை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் தொடர்ந்து கைகளை கழுவுவது போன்ற செயற்பாடுகளின் மூலம் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலையை தொடர்ச்சியாக ஓய்வெடுக்க வைப்பதன் மூலமும் அதிகமான நீரை உட்கொள்ள செய்வதன் மூலமும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் மேம்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.